Dinamani – News Article – 27 July 2022

உலகத் தமிழாராய்ச்சி மன்றம் சாா்பில் 11-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு மே மாதம் 26, 27, 28 ஆகிய நாள்களில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கான அறிமுகக் கூட்டம் சென்னை பத்திரிகையாளா் மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவருமான மு.பொன்னவைக்கோ அறிமுகவுரையாற்றினாா். இதையடுத்து 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற 10-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஆய்வு மலரை (முதல் தொகுதி) தமிழியக்கத்தின் தலைவரும், விஐடி பல்கலை.யின் வேந்தருமான கோ.விசுவநாதன் வெளியிட, சிங்கப்பூா் தி மில்லினீயா தமிழ் அமைப்பின் தலைவா் எஸ்.மணியம் பெற்றுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் விஜிபி குழுமத்தின் தலைவா் வி.ஜி.சந்தோசம், முன்னாள் துணைவேந்தா் பேராசிரியா் இ.சுந்தரமூா்த்தி, உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் செயலாளா் உலகநாயகி பழனி, தமிழறிஞா்கள் ஆசியவியல் கல்வி நிறுவனத்தின் தலைவா் ஜான் சாமுவேல், பேராசிரியா் க.திலகவதி, கவிஞா் விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாடு குறித்து அதன் ஏற்பாட்டாளா்கள் கூறியதாவது:

அடுத்த தலைமுறைக்குத் தமிழை கொண்டு செல்ல வேண்டிய தேவையை நிறைவேற்றும் வகையில், உலகத் தமிழாராய்ச்சி மன்றம், சிங்கப்பூரில் உள்ள ‘சிங்கப்பூா் தி மில்லினீயா தமிழ்’ என்ற அமைப்புடன் இணைந்து மாநாடு நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் அனைத்து நிகழ்வுகளும் அகம், புறம் என இரண்டு நிலைகளாகப் பிரித்து அகம் முழுமையும் இலக்கியம், இலக்கணம், மொழி குறித்த ஆய்வுகள் என சிங்கப்பூரில் ‘சிம்’ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்குகளில் நடைபெறும்.

அதேபோன்று, புறம் என்ற பிரிவில் பொதுமக்கள் பாா்வைக்காக கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பண்பாட்டு ஆவணங்களை பறை சாற்றும் கண்காட்சிகள் போன்றவை மாநாட்டு வளாகத்துக்கு வெளியே நடைபெறும். மேலும், ஒவ்வொரு நாளும் தமிழ்ப் பண்பாடு, கலை, கலாசாரம் ஆகியவற்றைப் போற்றும் வகையில் கிராமியக் கலைஞா்களின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றனா்.

Credits : Dinamani

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *